இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

படம்
இ லட்சுமணனின் கவிதைகளைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி .."அடடா..இறந்து விட்டாரா?" இத்தனை நுட்பமாக தன்னைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கையையும், மனிதர்களையும், மரங்களையும் கவனித்தவர் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்ற ஏக்கம் நிச்சயம் ஏற்பட்டது. ஆனால், வாழ்ந்திருந்தால், அவர் இன்றைய தினங்களின் அவலங்களை  நோக்கி (குறிப்பாக வக்கீல் வேலையிலிருந்து) கவிதை எழுதுவதையே நிறுத்தியிருப்ப்பார் எனத் தோன்றுகிறது. களத்து மேட்டில் கூட்டாஞ்சோறு தின்று, பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன் அப்பா, அம்மா விளையாடி, பச்சோந்தியின் வாயில் மூக்குப் பொடி தூவி, தட்டான் பிடித்து, வண்ணத்து பூச்சிகளை தொடர்ந்த தன் இளமைக் காலத்துடன் 'பொம்மைகளோடும், கேபிள் டிவி, வீடியோ கேமுடனும் சபிக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளின் பால்யத்தை ஒப்பு நோக்கி அவரது கவிதை நெஞ்சு நின்று போயிருக்கும் இலட்சுமணனின் பார்வையின் நுட்பம் பல கவிதைகளில் தெரிகிறது மேல்மூச்சு வாங்குகிற புயல், தார்குச்சிகளை அலட்சியம் செய்து மண்டியிடும் மாடு, காரணம் எதுவுமின்றி அலையும் தெரு நாய், மௌனத்தாலும், கவிழ்கிற பார்வ...

இசை

படம்
இ ருக்கலாம் பலருக்கு  இசையென்பது  பிணத் தோல்களின் இரைச்சலாய் .. ஆனால்  எனக்கோ  குருவிகளின்  சிறிய தொண்டைகளிலிருந்து .. இரா. இலட்சுமணன்

பெயர்

படம்
  என்னவாய் இருக்கும் தெருவில் அலைந்து திரிகிற அந்தப் பைத்தியத்தின் பெயர் ? இரா. இலட்சுமணன்

தொடரும் நிழல்

அண்ணனைப்போல் இரு  அல்லது  இருக்காதே  ஓப்பீடாய்ப் போதனைகள்  அயல்நாட்டு ஒற்றன் போல்  பள்ளி நாட்களில்  தொடரும் நிழல்  அதட்டப்படவும்  குட்டுப்படவும்  சாயம் மங்கி  பற்றாமல் போன சட்டைகளைப்  புத்தம் புதிய காப்பியாய்  அணிந்து கொள்ளவும்  தம்பி என ஓருருவம் ! எப்போது வாய்க்கும்  எனக்கென ஒரு பிம்பம்?  வெறுப்புதான்  ஆயினும்  இன்று  அண்ணா வரப்போகிறான்  என்றதும்  மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறது  இரா. இலட்சுமணன்

அப்பா

புகைவண்டியின்  டடக் டடக் சக்    சடக் சட்டக்  சத்தமாய்  அப்பாவின் ஆத்திர வார்த்தைகள்  எதிர் பர்த்தில்  அலட்சியமாய் தூங்கும் பயணியாய்  என் இயலாமை  இறங்கிப்  போகையில்  பெருமூச்சு விட்டபடி  அமைதியாய் நின்றது  புகை வண்டி !   இரா. இலட்சுமணன்

உயிர்ப்புள்ள பொழுதுகள்

களத்து வீட்டில்  கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டதையும்,  மணல் வீடு கட்டிப்  பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன்  அப்பாம்மா விளையாட்டு விளையாடியதையும்  பூத்துக் குலுங்கும்  புன்னைமரத்திலிருந்து  பொன்வண்டு பிடித்ததையும்  பச்சோந்தியின் வாயில்  மூக்குப்  பொடி  தூவி  மாறும் வண்ணங்களை  ரசித்ததையும்  பறக்கும் அழகில் லயித்து  தட்டான் பிடித்ததையும்  வண்ணத்துப் பூச்சிகளை தொடர்ந்து  பசி மறந்ததையும்  மறப்பதற்கில்லை  கோலங்களின் மத்தியில்  வைப்பதற்கென  பரங்கி, தும்பை பூக்களின்  முகங்களில்  விழித்த வைகறைகள்  வயல்களில் துள்ளும்  கெளுத்தி மீன்கள்  பிடித்த கைகளில்  சொரியும் ரத்தம்  தேனடைகளில்  ஈர்க்குச்சி செருகியெடுத்து   நக்கிச் சுவைத்த நாட்கள்  நினைக்குந்தோறும்  இனிக்கும்  சிதையாத ஞாபகங்கள் அவை  பொம்மைகளோடும்  கேபிள் டிவி, வீடியோ கேமுடனும்  சபிக்கப்பட்டிருக்கிறது  என் பிள்ளைகளின் பால்யம் ! குழந்தைகள் அறிவரோ  உயிர்...

எம் மக்கள்

படம்
வெள்ளைக்காரன் பட்டாளத்துல  சிப்பாயா இருக்கறவன்னு தெரிஞ்சதும்  அவனைப்  பாதி சவரத்தில் தொறத்துண வைரப்பன் தாத்தா  என்னைக்காவது ஒரு நாளு  வசதி வந்துடாதா எனக்  காது குத்தின   ஓட்டை  தூர்ந்திடாமல்  வேப்பங்குச்சி செருகியிருக்கும்  பாக்கியம் பெரியம்மா  புள்ளத்தாச்சி வயத்தில உதைக்கிற மாதிரி  மரத்தை வெட்டாதீங்கப்பா  மரத்தையும் நேசிக்க சொன்ன  காசியம்மா பாட்டி  இவர்களோடு  சாதியைச் சொல்லி  காதலை புதைத்த கல்லறையோடும்  என் கிராமம்  இரா. இலட்சுமணன்

அறியா மந்திரம்

படம்
புயலைப்போல  மேல்மூச்சு வாங்கி  புகை நுகர்ந்து  செவி கிழிக்கும்  பம்பைச் சத்தம் சூழ  கற்பூர ஜுவாலையை  கபக்கென்று நாவுக்குள் அமுக்கி  புரியாத மொழியாய்  சப்தித்து  ஆக்ரோஷமாய்க் காட்சியளித்து  சுத்துப்பட்டி எட்டு  கிராம சனங்களும்  கன்னம் தொட்டுச்  சேவித்து நிற்க  ஊருக்கெல்லாம்  குறி சொல்லும்  கோடி வீட்டுச் சாமிக்கு  ஏனோ தெரியவில்லை  போலியோவால்  முடங்கிய  தன் மகனின்  கால்களைச்  சரிபண்ணும் வித்தை மட்டும்.  இரா. இலட்சுமணன்

பிரிவு

நீ போகிறாய் .. ஒரு கன்றுக் குட்டியைப்போல  புரண்டு கதறுகிறது  மனசு ! சத்தம் போட்டு  அழுது தீர்க்கக் கூட   இயலாதவாறு செய்துவிடுகின்றன  சுற்றங்கள்.. தொலைந்து போகாத கட்டுப்பாடுகள்  துயரத்தைச் சேமிக்க்கின்றன  தண்ணீர் வற்றிப்  பொருக்கு வெடித்து கிடக்கும் நிலம் போல  நீயில்லாமல்  நினைவுகளின் வடுக்களோடு நான் .. கையசைத்துவிட்டு  உள்ளே போகிறாய்  எனது பெருமூச்சை  சிறிதேனும்  ஞாகபப்படுத்த வில்லையா  இந்த ரயில் ! சொல்  நீ  எனக்கென  வாங்கி தருவதாய்ச் சொல்கிற  எதையும் விட  முந்தா நாள்  என் கூந்தலில் வைத்து விட்ட  மல்லிகைப் பூ  அதிகமாய்ச் சிலிர்ப்பூட்டுகிறது  ஒரே ஒரு கேள்வி  என்னைப் போல்  நீயுமங்கே யோசிப்பாயா?  கணிப்பொறி  திரைப்படம்  தொலைப்பேசியில் வழியும்  பெண்ணின் குரல்  கொஞ்சம் பீர்  எண்ணக்கிடைக்கிற பணம்  என என்னை மறப்பாயா ? போயேன்.. நீ கொடுத்த  முத்தத்தின் ஈரம்  மூச்சுக்காற்றின் கதகதப்பு  காதல் நிறைந்த பார்வை  இவை...

பிள்ளையார் படமும், சாம்பிராணி பாயும்

படம்
ஐஸ் வண்டிக்காரனின்  பிள்ளையார் படத்துக்கு  குறுந்தாடி, குல்லா சகிதம்  புகை போடும்  சாம்பிராணி பாய் !   இரா. இலட்சுமணன்

வலி

 செங்குத்தாய் மேலேறும்  கான்க்ரீட் பாலத்தின் மீது  தார்க்குச்சிகளை அலட்சியம் செய்து  மண்டியிடும் மாட்டின் வலி தெரியுமா  கணக்கு பார்த்து மூச்சு விடும்  வண்டிக்காரனுக்கு ? இரா. இலட்சுமணன்

ஆமென்

பசிக்கிறவனுக்கு  உணவு கிடைப்பதாயில்லை  ரொட்டி துண்டுகளல்ல .. சாத்தானின் கனிகளாவது  கிடைக்காதா?  மரணத்திற்கேதுவான  துயரங்களத்தனையோடும்  வாழ்க்கை ! பிதாவே  எதிர்பார்க்காதீர் எம்மிடமிருந்து  உம் சித்தப்படியே ஆகக்கடவது  என்ற வார்த்தைகளை ! இரா. இலட்சுமணன்

தொடரும் பெரும் பயணம்

  பாசி படர்ந்த கோணல் தலையுடன்  சுழலும் பந்தோ  மூச்சு திணற ஓடி அலையும் ! மாதங்கள்  வினாடிகளாய்  வருடங்கள்  நிமிடங்களாய்  காலம் கிழவனாகும்  தண்ணீரும்  தகிக்கும் வெயிலும்  பனியும் என மாறி மாறி  அவசர கதியில்  ஆடைமாற்றம் நிகழும் ! பூமியின் உடலுக்குள்ளே  கபாலங்கள் மறைய மறைய  ஆசையை புதைக்க முடியா  அவஸ்தைகள் திமிறித்திமிறி  தலைமுறைகள் தழைக்கும் ! முடியாத ஆசைகளோ  தினம் தினம் முகிழ்க்கும்  ஊழியின் முடிவை நோக்கி  இறந்த உடல்கள் உற்றுப் பார்க்கும்  வாரிசு வடிவாய்  ஆசைகளின் தட்டி ஏந்தி  உடல்களின் ஊர்வலமோ  தொடர்கிறது யுகம்யுகமாய் ! இரா. இலட்சுமணன்

சுமை

படம்
  அங்கொரு நிமிடமாய்  இங்குச்சில நேரமாய்  காரணம் எதுவுமின்றி  அலையும்  குட்டி போட்ட தெரு நாய்க்கு  பெருத்து தொங்கும் பால்மடி  எப்போதேனும்  சுமக்க முடியாததாய்  தோன்றுமா என்ன ! இரா. இலட்சுமணன்

அந்தக் கணங்கள்

படம்
கலைந்த முடி கோதி விட்ட  அம்மாவின்  கை விரல்கள் .. சின்ன வயசில்  பள்ளிக்கூடத்திற்கும்  ஆஸ்பத்திரிக்கும்  தலை சாய்த்துச் சென்ற   அப்பாவின் தோள்கள்  முகம் பார்த்த போதெல்லாம்  பூரிப்பாய் புன்னகைத்து  நண்பனின்  கைகோர்த்துத் திரிந்த நாட்கள்  அவளின் பார்வை பட்ட  நிமிடங்கள்  இன்றில்லை  எனினும்  உறைந்து போயிருக்கின்றன  இதயத்தில்  அந்தக் கணங்கள் ! இரா. இலட்சுமணன்

நேற்றைய பிணங்களும் முந்தைய எலும்புக் கூடுகளும்

படம்
புதர் மண்டிக் கிடக்கும்  கல்லறைத் தோட்டங்கள்  ஆர்ப்பாட்டமாய்க் கழித்த பொழுதுகள் முடிந்து  நெருக்க நெருக்கமாய்  புதைந்து போன  உடற் சருகுகள் ! வசீகரம் இழந்து நிற்கும்  சிலுவைக் கோடுகள் ! சோகம் கவ்விக்கொள்ள  என்ன இருக்கிறது ?  பிறப்பும், திருமணமும் போல  மரணமும் ஒரு நிகழ்வு ! எவரில்லா விடின்  இருள் சூழ்ந்து விடும் ? நேற்றைய பிணங்களும்  முந்தைய எலும்புக் கூடுகளும்   வரிசையாக்க மண்ணுக்குள் ! இறந்தவர்  சுமப்பவர்  பேதமின்றிப்  புன்னகையோடு வரவேற்கும்  மயானப் பூக்கள் ! இரா. இலட்சுமணன்

அறிவுரை

தாத்தாவும், பாட்டியும்  அடிக்கடி சொன்னாங்களாம்  பணம், காசை செலவு பண்ணாதே..தண்ணி மாதிரி ! காணி, கழனி வித்துட்டுப் பட்டணம் வந்தாராம்  பரோபகார அப்பா !  கிராமம்,  வயல், குயிலு, குருவி, கருவ முள்ளு  எதுவும் பார்த்ததில்லே   ஏக்கம் யாருக்கும் புரிஞ்சதில்லே  அப்பா இப்போ  அடிக்கடி சொல்லுவாரு  காசு பணம் மாதிரி செலவு பண்ணாதே  கார்ப்பரேஷன் தண்ணிய  அப்பாவாயிருந்தா என்ன  அடியேனாயிருந்தா என்ன  யாரால முடியும்  அறிவுரை கேட்டு அப்படியே நடக்க ! இரா. இலட்சுமணன்

வீடு திரும்பல்

படம்
சுவர்க்கோழிகள் கிறீச்சிடும்  இராப்பொழுதில்  வீடு திரும்புகையில்  கலைந்த உறக்கத்தோடு  எழும் குரலைப்போல  வார்த்தைகளைப் பிரயோகித்து, கதவு திறக்கையில்  மௌனத்தாலும் கவிழ்கிற பார்வையாலும்  மன்னிப்புக் கோரி .. தாடைகள் அசைகின்ற  சத்தம் குறைக்க  மென்மையாய் சாப்பிட்டு  பூனை போல் தண்ணீர் குடித்து  விளக்கணைத்துப் படுக்கையில்  சொல்லிக் கொள்கிறேன் .. நாளைக்கேனும் .. நேரத்தில் வர ! இரா. இலட்சுமணன்

...

படம்
  சொல்லிக் கொள்கிற மாதிரி  அழகானதாய் இல்லை  சந்தன மரங்கள் ! இரா. இலட்சுமணன்

மரணம்

  தேதி குறிப்பிடப்படாத  மரண தண்டனைக் கைதிகள்  நாமெல்லாரும் ! இரா. இலட்சுமணன்

தீவு மனுஷி

படம்
 குழந்தைகள் உறங்கப் போய்விட்டார்கள்  இருளும்  தனிமையும்,சூழ  தீவு மனுஷியாய் நான்..  பள்ளிக்கூடம் கல்லூரியெனத் தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்படுவார்கள்     பின்னர்  உத்தியோக நிமித்தமாய்  ஊர் மாற்றல் சேதி வந்து சேரும்  கல்யாணமானதும்  தனியாய் ஓருலகம் அமையும்  அவர்களுக்கென்று  உறவுப்பாலம்  நூலிழையில் நிற்கும் ! எதிரே தொலைக்காட்சி பெட்டி  இருக்கும்   யுத்தம்,சமாதானம்  ஏராளமாய் மனிதர்கள்  ஏதேதோ நடக்கும்  ஆயினும்  யாருக்குப் புரியும்  என் தனிமை ? என் நாட்கள் முழுதையும்  நிரப்பிக்  கொண்டிருந்த குழந்தைகள்  தூங்கப் போய்விட்டார்கள்  அம்மா அம்மா வென  மழலையில் ஒலித்த குரல்களும்  ஈரம் படர்ந்திருப்பதாய்க்  கனவில் உணர்ந்து  அனிச்சையாய்  மார்பகம் துடைத்துக் கொள்ளுதலும்  வெளிப்படையாய்  வகுக்க முடியாத கண்ணீரும்  ... என்ன மிஞ்சி விடப்போகிறது  அழித்துப் போட்டு விட முடியாத   ஞாபகங்கள் தவிர ? இரா. இலட்சுமணன்

நகர வாழ்க்கை

படம்
பைத்தியம் பிடித்த தெரு நாய்களைப் போல  இங்குமங்கும் விரையும்  மோட்டார் வாகனங்கள் .. மனசுக்குள் குமட்டும்  சக மனிதனின்  வியர்வை நாற்றத்தோடு  பேருந்துப் பயணம் .. அலுவலகச் சிறைக்குள்  அமைதியைக் கிழிக்கும்  தட்டச்சு, தொலை பேசி  மனைவியின்  முகம் பார்த்துப் பேசவும்  வாய்ப்பின்றி கழியும் நாட்கள் ... நகரங்கள் நோக்கிச் செல்லும் சாலைகளற்ற  கிராமத்துக்குள்  தவறியேனும்  சென்றிடல் வாய்க்குமோ எனக்கு ? இரா. இலட்சுமணன்  

அழகு

படம்
  உறங்கி விழித்தெழுகிற  காலையிலும்  ஓடிக் களைத்துத் திரும்புகிற  மாலையிலும்  அழகாய்த்தான் இருக்கிறாய் ! இரா. இலட்சுமணன்

வறுமை

சறுக்குப் பாறையில்  டிரவுசர் கிழிய  புட்டம் தேய்த்து விளையாடுகிற  குழந்தை அறியுமோ  அப்பாவின் வறுமையை ! இரா. இலட்சுமணன்

ஆசீர்வதிக்கப்படுவேனாக

படம்
  இரா. இலட்சுமணன்

எவ்வளவு கேலி ?

  எவ்வளவு கேலி ? தலைகுனிந்து நடந்தாலும்  நகைக்கின்றன  காலையில் பூக்கள்  இரவில் விளக்குகள்  இரா. இலட்சுமணன்

யாரேனும் ..

  யாரேனும்  பகிர்ந்து கொள்ள முடியுமா ... மரணத்தை?  இரா. இலட்சுமணன்

இரக்கம்

படம்
  பாவம் பச்சைக்கிளி  சின்னக் கூண்டுக்குள்  சிறை வைப்பதா? நாளையே  பெரிய கூண்டாய்  வாங்கவேண்டும் ! இரா. இலட்சுமணன்

கர்த்தரை ரட்சியுங்கள்

படம்
இருபதாம் நூற்றாண்டில்  பிறந்த இயேசு  கதறியழுதார்  "என்னை எப்போது  சிலுவையில் அறையப்போகிறீர்கள்?" இரா. இலட்சுமணன்

கம்யூனிசம்

படம்
  மாருதி காரில் போனாலென்ன  சேப்பு கலரா இருந்தா போதும்  விடியுமுட்டும் பேசித் தீர்க்கலாம்  கம்யூனிசம்  இரா. இலட்சுமணன்

சொல்ல முடியுமா ?

துயரங்களின் மடியில்  தலைசாய்த்துக் கிடக்கும்  கவிதையைப்  பாருங்கள்  உதடு விரித்து மலர்கிற  சிரிப்பு தெரியும்  வெடிக்கக் காத்திருக்கிற  சோகம் தெரியுமா ? காயத்திற்கும், வேதனைக்கும்  என்ன வேற்றுமை? காயங்களினின்றும்  ரத்தம்  வேதனைகளினின்றும் கண்ணீர்  சொல்ல முடியுமா.. காயம் பெரிதா ? வேதனை பெரிதா ? இரா. இலட்சுமணன்

கவலை

  கவலையில்லை வானத்திற்கு  எரிந்து வீழ்ந்தாலும் குறைவதேயில்லை  நட்சத்திரங்கள்                                                            இரா. இலட்சுமணன்

..

படம்
  மலர்கள் அழகானவைதாம்  எப்படி ரசிக்க முடியும்  இறுதி ஊர்வலத்தின் பாதையில் ?                                                           இரா. இலட்சுமணன்

கிளர்வு

பன்னீர் மரங்களின் கீழ்  உதிர்ந்து கிடக்கிற மலர்கள்  மெல்லிய மழைச்சாரலின் ஊடே  நனைந்து செல்கிற பொழுதுகள்  நிலவொளி நிரம்பிய  வெளிர் வானம்  கண்ணுக்கு புலப்படாததாய்  இருள்சூழ் தருணங்களில்  அலைகளின் இரைச்சல்  ஒன்றிக்கொன்று  தொடர்பில்லை எனினும்  கிளர்கின்றன ஞாபகங்கள் .. உன்னோடு பிணைப்புள்ளதால் .. இரா. இலட்சுமணன்

....

படம்
  அவளை அணைக்க முடியவில்லை  மனசுக்குள் நெளிகின்றன  புடவைக்காய் இறந்த பட்டுப்புழுக்கள்  இரா. இலட்சுமணன்

சுமை

படம்
  சுமை முதுகைத் தள்ள மகிழ்ச்சி பொங்கும் குப்பை பொறுக்கும் சிறுவன் !                        இரா. இலட்சுமணன்

முகம்

படம்
  திறந்த வாயிற்படியில்  ஒரு முகம் தோன்றி  ஏதேனும் உரைக்கட்டும்  கவலையில்லை  பார்க்கும்போது  பூட்டில்லாமலிருத்தல் வேண்டும் ! இரா. இலட்சுமணன்

ஒத்திவைப்பு

சிறுநீர் கழிக்கத்  தூண்டப்படுகையில்  வீதியென்றும் பார்ப்பதில்லை  நாகரீகத்தை புறந்தள்ளலாம். கடிகார முட்களின் மீது  பார்வை அமர்ந்திருக்கும்  பசியாறும் நேரம் பார்த்து ! காலந்தப்பினால்  எல்லாம் போச்சென்று  ஏராளமாய் உபதேசம் இருக்கிறது  ஆனாலும்  அப்புறம் எழுதலாம்  ஒத்திவைக்க எப்போதும்  இலகுவாய் இருக்கிறது  கவிதை ! இரா. இலட்சுமணன்

ரசி மென்மையாய் ...

படம்
  நம்பிக்கை முழுதும் வற்றிப்போய் நடக்கும் போதும் - தொட்டியிலிருக்கும் பூக்களை பக்கத்துக்கு வீட்டுக் குழந்தையின் சிரிப்பை, பறக்கும் வண்ணத்து பூச்சியை எதிரே வருபவரின் முகப்பொலிவை ஏதேனும் ஒன்றை ரசி மென்மையாய் ! இரா. இலட்சுமணன்

கருப்பு, வெள்ளையில் ஒரு பழைய ஆல்பம் - கவிஞர் கல்யாண்ஜி (வண்ணதாசன்) அணிந்துரை

படம்
து யரங்களின் மடியில் தலை சாய்த்து கிடைக்கும் கவிதையை பாருங்கள் என்று இரா. லட்சுமணனின் ஒரு கவிதை துவங்குகிறது. நானும் அப்படித்தான் துவங்க வேண்டும். லட்சுமணனுடைய கவிதைகள் ஒரு புறத்திலும், லட்சுமணனைப் பற்றிய நினைவுகள் இன்னொரு புறத்திலுமாக இருக்கிற நிலையில், மீண்டும் மீண்டும் லட்சுமணனைப் பற்றி அவருடைய நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை மீதே முழுமனதும் கவிந்திருக்கிறது. காற்று வேப்பம் பூக்களை உதிர்க்கையில் எனக்குக் காற்றை விட,எதிர் நிற்கிறவர் சிகையின் மீதும், என் உள்ளங்கையிலும் உதிர்ந்த சின்னஞ் சிறு பூக்களை ஏந்திக் கொள்ளவே தோன்றுகிறது. காற்றுக்கு என்ன என்றைக்கும் இருக்கிறது அது. மறுபடியும் வீசவும் கூடும். "எங்கும் யாருக்கும் எதுவும் நடக்கலாம்" என்று ஜெயந்தனின் கவிதையை லட்சுமணன் சொல்லிச் சொல்லி ரசிப்பாராம். அவருக்கு எதுவும் நடக்கலாம் என்பதை அவரே அனுமாத்திருந்தாரோ என்னவோ ! மரணத்தை பற்றி அவர் திரும்ப திரும்ப எழுதுகிறார் "மரணத்திற்கேதுவான துயரங்கள் அத்தனையோடும் வாழ்க்கை" "பிறப்பும், திருமணமும் போல மரணமும் ஒரு நிகழ்வு" "தேதி குறிப்பிடாத மரண தண்டனைக் கைதிகள் நா...

இலட்சுமணன் என்கிற மனிதன்

இ ருபத்தைந்து வயதிற்குள் என்ன சாதிக்க முடியும் ஒரு மனிதனால்? இந்த கேள்விக்கு பதில் கூறும்முன் இலட்சுமணன் என்கிற மனிதனின் வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்த்தாக வேண்டும் வேதாரண்யத்தில் 1971 ஜூன் 17ஆம் நாள் இலட்சுமணன் பிறந்தார் (தாயார் - ஞான சௌந்தரி ; தந்தை- இராமலிங்கம்) துவக்கப் பள்ளியில் படித்த போதிலிருந்தே பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பல பரிசுகள் பெற்றவர், பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் திருச்சி சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படித்த போது, பல்வேறு பட்டிமன்றங்களில் அணித்தலைவராகவும், நடுவராகவும் இருந்தார். பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேச்சுப் போட்டி குழுவின் தலைவராக ஓராண்டு இருந்தார்; விகடன் நிறுவனத்தின் மாணவ நிருபர் பயிற்சி திட்டத்தில் தேர்வு பெற்று, சிறப்பாக பணி புரிந்தமைக்கு பாராட்டு பெற்றார். சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கு தோல்வியுறாமல் தேர்ச்சி பெற்ற ஒரு சில மாணவர்களுள் இலட்சுமணனும் ஒருவர் சட்டப்படிப்பு முடித்த பின் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் திரு. செந்தில் நாதனுக்கு ஜுனியராகப் பணி புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் இலட்சுமணனின் ...