தீவு மனுஷி
குழந்தைகள் உறங்கப் போய்விட்டார்கள்
இருளும் தனிமையும்,சூழ
தீவு மனுஷியாய் நான்..
பள்ளிக்கூடம் கல்லூரியெனத்
தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்படுவார்கள்
பின்னர்
உத்தியோக நிமித்தமாய்
ஊர் மாற்றல் சேதி வந்து சேரும்
கல்யாணமானதும்
தனியாய் ஓருலகம் அமையும்
அவர்களுக்கென்று
உறவுப்பாலம் நூலிழையில் நிற்கும் !
எதிரே தொலைக்காட்சி பெட்டி
இருக்கும்
யுத்தம்,சமாதானம்
ஏராளமாய் மனிதர்கள்
ஏதேதோ நடக்கும்
ஆயினும்
யாருக்குப் புரியும்
என் தனிமை ?
என் நாட்கள் முழுதையும்
நிரப்பிக் கொண்டிருந்த குழந்தைகள்
தூங்கப் போய்விட்டார்கள்
அம்மா அம்மா வென
மழலையில் ஒலித்த குரல்களும்
ஈரம் படர்ந்திருப்பதாய்க்
கனவில் உணர்ந்து
அனிச்சையாய்
மார்பகம் துடைத்துக் கொள்ளுதலும்
வெளிப்படையாய்
வகுக்க முடியாத கண்ணீரும் ...
என்ன மிஞ்சி விடப்போகிறது
அழித்துப் போட்டு விட முடியாத
ஞாபகங்கள் தவிர ?
இரா. இலட்சுமணன்
கருத்துகள்
கருத்துரையிடுக