இலட்சுமணன் என்கிற மனிதன்
இருபத்தைந்து வயதிற்குள் என்ன சாதிக்க முடியும் ஒரு மனிதனால்? இந்த கேள்விக்கு பதில் கூறும்முன் இலட்சுமணன் என்கிற மனிதனின் வாழ்க்கையை சற்றே புரட்டிப் பார்த்தாக வேண்டும்
வேதாரண்யத்தில் 1971 ஜூன் 17ஆம் நாள் இலட்சுமணன் பிறந்தார் (தாயார் - ஞான சௌந்தரி ; தந்தை- இராமலிங்கம்) துவக்கப் பள்ளியில் படித்த போதிலிருந்தே பள்ளிகளுக்கு இடையேயான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகளில் பல பரிசுகள் பெற்றவர், பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் திருச்சி சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் படித்த போது, பல்வேறு பட்டிமன்றங்களில் அணித்தலைவராகவும், நடுவராகவும் இருந்தார். பாரதி தாசன் பல்கலைக் கழகப் பேச்சுப் போட்டி குழுவின் தலைவராக ஓராண்டு இருந்தார்; விகடன் நிறுவனத்தின் மாணவ நிருபர் பயிற்சி திட்டத்தில் தேர்வு பெற்று, சிறப்பாக பணி புரிந்தமைக்கு பாராட்டு பெற்றார். சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டுகளுக்கு தோல்வியுறாமல் தேர்ச்சி பெற்ற ஒரு சில மாணவர்களுள் இலட்சுமணனும் ஒருவர்
சட்டப்படிப்பு முடித்த பின் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் திரு. செந்தில் நாதனுக்கு ஜுனியராகப் பணி புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் இலட்சுமணனின் வளர்ச்சி சீராகவும், விரைவாகவும் இருந்தது. சென்னையில் பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சூளைமேடு கிளையின் தலைவராக இருந்த இலட்சுமணன் தனது சமூகத்தை கவிதையின் மூலம் நுட்பமாக படம் பிடித்து வந்தார்
ஒரு மனிதனை அவனது சாதனைகளால் மட்டுமே எடை போடலாகாது; அவனது குண நலன்கள், பிறரிடம் அவன் பிரதிபலித்த பிம்பம் இவை மேலும் முக்கியமானவை.
எவர் மனதும் நோகாமல், அனைவர்க்கும் இனியவனாய் இருந்தது தான் இலட்சுமணன் தனித்தன்மை. எந்த தீய பழக்கத்திலும் சிக்காத தன்மை, பார்த்த ஐந்தாவது நிமிடமே நெடு நாள் பழகியது போன்ற உணர்வைத் தரும் சுபாவம்; விரல் நுனியில் பல சுவாரஸ்ய தகவல்கள், சமூகத்தைப் பற்றிய ஆழ்ந்த அக்கறை, வெள்ளை உள்ளத்தை பிரதிபலிக்கும் புன்னகை (பிறர் பாராட்டுகையில் அதில் வெட்கம் ஒன்று சேர்ந்து கொள்ளும்), அவரது நெருங்கிய நண்பர்களால் மட்டுமே புரிந்து ரசிக்க கூடிய குழந்தைத் தனம் - இவற்றின் கலவையே இலட்சுமணன்.
இலட்சுமணன் தன் வாழுங்காலம் முழுதும் எவரையும், எதன் பொருட்டும் சிறிதும் காயப்படுத்தியது இல்லை; நம்புவதற்கு கடினமான, ஆனால் சத்தியமான உண்மை இது
இலட்சுமணன் வாழ்ந்த காலம் குறைவெனினும் மிகச் சிறப்பான முறையில் அவர் வாழ்ந்தார். அவர் சாதிக்க வேண்டியது ஏராளமிருக்க, திடீரென அவர் மரணமுற்றார் என்ற வருத்தம் இலட்சுமணனை நன்கு அறிந்த அனைவருக்கும் இருக்கும் .
இலட்சுமணனின் அனைத்து நண்பர்கள் சார்பாக
ஆ. மோகன் குமார்
கருத்துகள்
கருத்துரையிடுக