இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

லட்சுமணனின் கவிதைகளைப் படித்த போது எனக்கு ஏற்பட்ட முதல் உணர்ச்சி .."அடடா..இறந்து விட்டாரா?" இத்தனை நுட்பமாக தன்னைச் சுற்றிலும் உள்ள வாழ்க்கையையும், மனிதர்களையும், மரங்களையும் கவனித்தவர் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருப்பார் என்ற ஏக்கம் நிச்சயம் ஏற்பட்டது.


ஆனால், வாழ்ந்திருந்தால், அவர் இன்றைய தினங்களின் அவலங்களை  நோக்கி (குறிப்பாக வக்கீல் வேலையிலிருந்து) கவிதை எழுதுவதையே நிறுத்தியிருப்ப்பார் எனத் தோன்றுகிறது. களத்து மேட்டில் கூட்டாஞ்சோறு தின்று, பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன் அப்பா, அம்மா விளையாடி, பச்சோந்தியின் வாயில் மூக்குப் பொடி தூவி, தட்டான் பிடித்து, வண்ணத்து பூச்சிகளை தொடர்ந்த தன் இளமைக் காலத்துடன் 'பொம்மைகளோடும், கேபிள் டிவி, வீடியோ கேமுடனும் சபிக்கப்பட்டிருக்கும் தம் பிள்ளைகளின் பால்யத்தை ஒப்பு நோக்கி அவரது கவிதை நெஞ்சு நின்று போயிருக்கும்

இலட்சுமணனின் பார்வையின் நுட்பம் பல கவிதைகளில் தெரிகிறது

மேல்மூச்சு வாங்குகிற புயல், தார்குச்சிகளை அலட்சியம் செய்து மண்டியிடும் மாடு, காரணம் எதுவுமின்றி அலையும் தெரு நாய், மௌனத்தாலும், கவிழ்கிற பார்வையாலும் கோருகிற பாவ மன்னிப்பு, "சொல்லிக் கொள்கிற  மாதிரி அழகில்லாத சந்தன மரங்கள்" .. இலட்சுமணனின் அத்தனை படிமங்களுடனும் நம்மால் ஒட்டிக் கொள்ள முடிகிறது

சாமர்த்தியமாக மறைத்த வைக்கப்பட்ட சமூகச் சாடல் பல கவிதைகளில் இருந்தாலும் அழகும், நுட்பமான பார்வையும், மனித நேயமும் தான் இவர் கவிதையின் வலுவான தூண்கள்.

இல்லையென்றால் பேருந்துப் பயணத்தில் யாரோ ஒருவரின் தோளில் இருக்கும் குழந்தையின் கால்கள் தன் மீது படும்படியாக ஆசீர்வாதம் கேட்பாரா?

எப்போதாவது, அரிதாக கிடைக்கும் நல்ல கவிஞர்களில் ஒருவரைக் கண்டு பிடித்த பரவசத்துடன், அவரை 25 வயதில் இழந்து விட்ட சோகத்துடன் ..

சுஜாதா
சென்னை
22.6.97

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தொடரும் நிழல்

இசை