உயிர்ப்புள்ள பொழுதுகள்


களத்து வீட்டில் 

கூட்டாஞ்சோறு சமைத்து சாப்பிட்டதையும், 

மணல் வீடு கட்டிப் 

பக்கத்துக்கு வீட்டு பாத்திமாவுடன் 

அப்பாம்மா விளையாட்டு விளையாடியதையும் 


பூத்துக் குலுங்கும் 

புன்னைமரத்திலிருந்து 

பொன்வண்டு பிடித்ததையும் 


பச்சோந்தியின் வாயில் 

மூக்குப்  பொடி  தூவி 

மாறும் வண்ணங்களை 

ரசித்ததையும் 


பறக்கும் அழகில் லயித்து 

தட்டான் பிடித்ததையும் 

வண்ணத்துப் பூச்சிகளை தொடர்ந்து 

பசி மறந்ததையும் 

மறப்பதற்கில்லை 


கோலங்களின் மத்தியில் 

வைப்பதற்கென 

பரங்கி, தும்பை பூக்களின் 

முகங்களில் 

விழித்த வைகறைகள் 


வயல்களில் துள்ளும் 

கெளுத்தி மீன்கள் 

பிடித்த கைகளில் 

சொரியும் ரத்தம் 


தேனடைகளில் 

ஈர்க்குச்சி செருகியெடுத்து  

நக்கிச் சுவைத்த நாட்கள் 

நினைக்குந்தோறும் 

இனிக்கும் 

சிதையாத ஞாபகங்கள் அவை 


பொம்மைகளோடும் 

கேபிள் டிவி, வீடியோ கேமுடனும் 

சபிக்கப்பட்டிருக்கிறது 

என் பிள்ளைகளின் பால்யம் !


குழந்தைகள் அறிவரோ 

உயிர்ப்புள்ள 

என் பிஞ்சுப் பொழுதுகளை !


இரா. இலட்சுமணன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலட்சுமணனின் நுட்பமான பார்வை : எழுத்தாளர் சுஜாதா அணிந்துரை

தொடரும் நிழல்

இசை